Saturday, September 7, 2013

ஐஓஏ சட்டத் திருத்தம் செய்ய இறுதி நாள் அக்டோபர் 31



இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) சட்டத்தில் திருத்தம் செய்து, குற்றம் சாட்டப்பட்ட நபர்களை அக்டோபர் 31-ம் தேதிக்குள் பதவி நீக்கம் செய்ய வேண்டும். பின்னர், டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஐஓஏ தேர்தலை நடத்த வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் (ஐஓசி) தெரிவித்துள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் குடும்பத்தில் ஐஓஏ மீண்டும் இணைய, குறிப்பிட்ட தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஐஓசி எச்சரித்துள்ளது.

நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்கக் கூடாது என்று ஐஓசி கூறுகிறது. ஆனால், அவ்வாறு நடக்க முடியாது; இந்திய சட்டம் அதை அனுமதிக்காது என்று ஐஓஏ தெரிவிக்கிறது.
இந்தப் பிரச்னையால், ஐஓசி வெளியிட்டுள்ள் ஐஓஏவின் மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளை அமல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.
தனது நிலையை மாற்றிக் கொள்ள மாட்டோம் என்று ஐஓசியின் பொதுக் கூட்டத்தில் வியாழக்கிழமை உறுதிபடத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐஓசியின் இயக்குநர் ஜெனரல் கிறிஸ்டோபி டி கெப்பர், ஐஓஏவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டதாவது:
ஐஓஏவின் செயற்குழு கூட்டத்தில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு போட்டியிடத் தடை விதிப்பதைத் தவிர, மற்ற விதிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. குற்றப் பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்ட நபர்களுக்கும், குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கும் இடையேயான வேறுபாடுகளை ஐஓசி நன்கு அறியும்.
நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மற்றும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஐஓஏ தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்று நாங்கள் தெரிவித்துள்ளோம்.
"குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரையில் அவர் அப்பாவி' என்ற கூற்றை ஐஓசி மதிக்கிறது. அதேசமயம், சர்வதேச ஒலிம்பிக் இயக்கத்தின் நன்மதிப்பை கெடுக்கும் செயல்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
ஐஓஏவின் செயற்குழு கூட்டத்தை அக்டோபர் 31-ம் தேதிக்குள் மீண்டும் கூட்ட வேண்டும். அதில், உரிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால், ஐஓஏவின் புதிய சட்டத்துக்கு ஐஓசி ஒப்புதல் அளிக்கும். பின்னர், ஐஓஏவுக்கான புதிய தேர்தலை டிசம்பர் 15-ம் தேதிக்குள் நடத்த வேண்டும்.
மேற்கூறப்பட்ட நடவடிக்கைகளை ஐஓஏ மேற்கொண்டால், அதன் சஸ்பெண்ட் நீக்கம் குறித்து பரிசீலிக்கப்படும்.
ஐஓஏ, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறோம். விளையாட்டுத்துறையில் சிறந்த நிர்வாகம், நெறிமுறைகள் மற்றும் நேர்மையை ஏற்படுத்த, ஐஓஏ-வுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிந்த்ரா மீது செüதாலா பாய்ச்சல்
ஐஓஏவில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஓஏவின் தலைவர் அபய் சிங் செüதாலா, பிந்த்ராவை கடுமையாகச் சாடியுள்ளார்.
"குற்றம் சாட்டப்பட்ட நபர்களை, அவர்களுடைய பதவியிலிருந்து கீழிறக்க வேண்டும் என்று பிந்த்ரா நம்பினால், முதலில் தனது தந்தையான ஏ.எஸ்.பிந்த்ராவை அவரது வீட்டிலிருந்து வெளியேற்றட்டும் அல்லது வீட்டிலிருந்து பிந்த்ரா வெளியேறட்டும்' என்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் செüதாலா தெரிவித்தார்.
நிதிப் பிரச்னையால், ஏ.எஸ்.பிந்த்ரா 2009-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதைக் கருத்தில் கொண்டே செüதாலா இவ்வாறு கூறியுள்ளார்.
அமைச்சர் கண்டனம்: செüதாலாவின் விமர்சனத்துக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"செüதாலா பிரச்னையை திசை திருப்பப் பார்க்கிறார். இதற்கு அது நேரமில்லை. முதலில், ஐஓஏவில் உள்ள குற்றம் சாட்டப்பட்ட நபர்களை வெளியேற்றி, சிறந்த நிர்வாகம் மற்றும் நெறிகளை ஏற்படுத்துவற்கு செüதாலா நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அவர் தெரிவித்தார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தை ஐஓசி அங்கீகரிக்காது என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால், சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள், நமது தேசியக் கொடியின் கீழ் பங்கேற்பதற்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் ஜிதேந்திரி சிங் கூறியுள்ளார்.
பிந்த்ரா மீதான செüதாலாவின் விமர்சனத்துக்கு, தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கத் தலைவர் ரனீந்தர் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே, அபினவ் பிந்த்ராவுக்கு டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment